திங்கள், 30 மே, 2011

நோக்கியாவின் புதிய முயற்சி

இந்தியாவில் மொபைல் போன் பயன் படுத்துபவர் களால், அதிகம் மதிக்கப்படும் நிறுவனம் நோக்கியா. இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, அதிக வசதிகளுடன், கூடுதலான எண்ணிக்கையில் மாடல்களை நோக்கியா வெளியிட்டு வருகிறது. இந்திய நிறுவனங்கள் சிலவற்றால், நோக்கியாவின் சந்தைப் பங்கு சற்று குறைந்த இந்நிலையில், வாடிக்கயாளர்களின் விருப்பங்களை ஆய்வு செய்து, அவர்களின் தேவைக்கேற்ப மாடல்களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த தகவலை நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொபைல் இன்டர்நெட் பயன்படுத்து பவர்களில், 78% பேர் 35 வயதுக்குக் குறைந்தவர்கள் என்றும், இவர்களில் பெரும்பாலானவர்கள், மொபைல் இன்டர்நெட்டில் தொடர்ந்து சேட்டிங் செய்வதனையே விரும்புகின்றனர் என்றும் தன் ஆய்வில் அறிந்ததாக நோக்கியா கூறியுள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் சோஷியல் நெட்வொர்க் தளங்களையும் நாடுபவர்களாக இருக்கின்றனர்.
இவர்களின் தேவைகளை நிறைவேற்றவும், இவர்களைக் கவரவும், குவெர்ட்டி கீ போர்டு உள்ள மொபைல் போன்களை, நோக்கியா வெளியிட முன்வந்துள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட நோக்கியா எக்ஸ் 02-01 இத்தகைய மொபைல் போனாகும். இது 2ஜி வசதி கொண்ட தொடக்க நிலை மொபைல் போனாகும். இதில் நோக்கியா நிறுவனத்தின் எஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. குவெர்ட்டி கீ போர்டு தரப்பட்டுள்ளது. இதன் வண்ணத்திரை 2.4 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் தொழில் நுட்ப வசதிகள் தரப்பட்டுள்ளன. விஜிஏ கேமரா, எப்.எம். ரேடியோ, மியூசிக் பிளேயர், 8ஜிபி வரை நினைவகத்திறன் அதிகப்படுத்தும் வகையிலான மெமரி கார்ட் ஸ்லாட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 1020 எம்.ஏ.எச். பேட்டரி ஆகியவையும் உள்ளன. இந்த போன் ஏர்டெல் நிறுவனம் வழி விற்பனை செய்யப்படுகிறது. இதன் சந்தாதாரர் ஆக, இந்த போனை வாங்குபவர்களுக்கு ஓவி சேட் வசதி இலவசமாகக் கிடைக்கிறது. ஒவ்வொரு மாதமும் 100 எம்பி டேட்டா இலவசமாக இறக்கிக் கொள்ள சலுகை அளிக்கப்படுகிறது. இந்த போனின் விலை ரூ. 4,459 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற நிறுவனங்கள், தொடுதிரை வழியாக, வாடிக்கையாளர்களை, குறிப்பாக இளைஞர்களைக் கவரத் திட்டமிடுகையில், நோக்கியா பழைய தொழில் நுட்பமான குவெர்ட்டி கீ போர்டு வழியில் தன் வாடிக்கையாளர்களை வளைக்க எண்ணுகிறது. மேலும் ஏர்டெல் வழியாக, சில இலவசக் கூடுதல் சலுகைகளையும் அளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

************************************